ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை துணை ஆய்வாளர் கையும் களவுமாக கைது

வியாழன், 20 நவம்பர் 2014 (19:42 IST)
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் மணல் லாரியை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 
பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தத்தைச் சேர்ந்தவர் முருகன் (35). இவருக்குச் சொந்தமான மினிலாரியில் தாழையூத்து காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து, கடந்த 24.9.2014 அன்று பறிமுதல் செய்தனர். அதன்பின்பு திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3 இல் ஆணை பெற்று பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மீட்க தாழையூத்து காவல் நிலையத்துக்கு முருகன் சென்றார். அப்போது தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் சோனமுத்து (44), லாரியை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து திருநெல்வேலியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினருக்கு முருகன் தகவல் கொடுத்தார்.
 
காவல்துறையினரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணத்தை முருகன், காவல் ஆய்வாளர் சோனமுத்துவிடம் வியாழக்கிழமை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு உதவி கண்காணிப்பாளர் பர்குனம், ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் சோனமுத்துவை கையும், களவுமாக கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்