கோவையை மையமாக கொண்ட கிரிப்டோ கரன்சி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த நிறுவனத்தை அறிமுகம் செய்த தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறிய கோவை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தில், ஏராளமான பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் முதலீடு செய்தனர்.
இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். அதன் பிறகு, மூன்று மாதங்கள் கழித்து மகாபலிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டு, முதலீடு செய்தவர்களுக்கு கார்களை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்நிறுவனத்தில் மோசடி நடந்ததாக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக நிறுவனத்தின் இரண்டு முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, இந்த மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இருவரும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.