'சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' - உயர்நீதிமன்றம் அறிவுரை

ஞாயிறு, 25 அக்டோபர் 2015 (14:13 IST)
‘சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதே சட்டம் என்றும், இந்த சட்டத்தை சிறுவர் நீதிக் குழுமங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

 
நெல்லையைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பெண்ணைக் கேலி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் சிறுவன், தான் நீதிமன்றத்தில் சரண் அடைய உள்ளதாகவும், அவ்வாறு சரண் அடையும்போது அன்றே தனக்கு ஜாமீன் வழங்க நீதித்துறை நடுவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
 
சிறுவர் சீர்திருத்தச் சட்டப்படி முன்ஜாமீன் பெற முடியாது; ஜாமீன் தான் பெற முடியும்; எனவே, இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த அன்றே ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அச்சிறுவன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, ”சிறுவர் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் ஒரு வரை போலீசார் கைது செய்து சிறுவர் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தினாலோ அல்லது அந்த சிறுவன் அவராகவே நீதிமன்றத்தில் சரண் அடைந்தாலோ அன்றே அவருக்கு நிபந்தனையுடன் அல்லது நிபந்தனை இல்லாமல் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார்.
 
சம்பந்தப்பட்ட சிறுவர் வெளியில் நடமாடினால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கருதினால் அல்லது அவரது நலன் கருதி முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் தவிர அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் சிறுவர் சீர்திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்குவது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை சார்ந்ததாகும்; இதை சிறுவர் நீதிக் குழுமங்கள் நினைவில் வைத்து செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்