மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாநகர மேயருக்கு கிடைக்கும் பட்சத்தில் மாமன்றம் சிறந்த முறையில் செயல்படும் என்று கருதப்பட்டது. அதன் காரணமாக மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநகர மேயரை தேர்ந்தெடுப்பது என்று அரசு முடிவு செய்து இருக்கிறது. மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அரசு மாநகராட்சி தொடர்பான சட்டங்களை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என முடிவு செய்கிறது. இந்த சட்ட முன் வடிவு (மசோதா) மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விளைகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்ட திருத்தத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி,திருப்பூர், திண்டுக்கல், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய 10 நகரங்கள் மாநகராட்சிகளாக உள்ளன. இந்த மா நகராட்சிகளுக்கான மேயர் பதவிக்கு கடந்த தேர்தலில் மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.