2 வயது குழந்தைக்கு டிக்கெட் கொடுத்த நடத்துநர் சஸ்பெண்ட் - அமைச்சர் தகவல்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (11:29 IST)
2 வயது குழந்தைக்கு டிக்கெட் கொடுத்த பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த கேள்வி நேரத்தில், அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? என உறுப்பினர் ஜவாஹிருல்லா (மமக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்.), நாராயணன் (சமக) ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணி, “சென்னையில் 100 ஏ.சி. பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.25 ஆயிரம் செலவாகும்.
 
எனவே அனைத்து பேருந்துகளிலும் நிதி நிலைக்கு ஏற்ப கேமரா பொருத்தப்படும். தனியார் பேருந்துகளில் கேமராக்கள் பொருத்துவது குறித்தும் உரிய அறிவுரை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி, பேருந்துகளிலும் கேமரா பொருத்த உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இது மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது” என்றார்.
 
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி, “மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல இலவச பயண அட்டை வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? அது அமலாகுமா? 2 வயது குழந்தைக்கு கூட அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டுள்ளார்களே? என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, ”2 வயது குழந்தைக்கு டிக்கெட் வாங்கியதாக தகவல் வந்ததும் அது பற்றி விசாரித்து சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்