மத்திய பட்ஜெட்டுக்கு கண்டனம்.! தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்.!!

Senthil Velan

சனி, 27 ஜூலை 2024 (11:25 IST)
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதேபோல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்தது. இதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்திலும் பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா? என ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
 
அதேபோல், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ALSO READ: ஆகஸ்ட் 22-ல் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.! மத்திய அரசு ஒப்புதல்..!!
 
தூத்துக்குடியில் கனிமொழி தலைமையிலும், தேனியில் தங்க தமிழ்செல்வன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர், சேலம் , உள்ளிட்ட தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்