கணினி, விவசாய ஆசிரியர்களுக்கு முதல்முறையாக இடமாறுதல்: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (00:17 IST)
அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்களுக்கும், விவசாய ஆசிரியர்களுக்கும், முதல்முறையாக கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 

 
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முறையில் ஆண்டுதோறும் பொது இடமாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது. 
 
தங்களுக்கு, இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் முன்னுரிமை போன்றவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். பின்பு, காலிப் பணியிடம் இருக்கும் விருப்பமான பள்ளியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விவசாயம் மற்றும், கணினி பாடங்களை கற்றுக் கொடுக்க, 1,880 கணினி ஆசிரியர்களும், 300 விவசாய ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2008 ஆம் ஆண்டு முதல் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு இதுவரை லந்தாய்வு முறையிலான இடமாறுதல் வசதி இல்லாமல் இருந்து வந்தது.
 
இந்த நிலையில், மற்ற ஆசிரியர்களைப் போல கணினி ஆசிரியர்களுக்கும், விவசாய ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல், விருப்ப மாறுதல் வழங்க தமிழக அரசு அனுமதி  அளித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்