என்னை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க: உதவி போலீஸ் கமிஷனர் மனு

ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (23:45 IST)
காவல்துறை பணியில் இருந்து என்னை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க, அப்பத்தான் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும் என சென்னை உதவி போலீஸ் கமிஷனர் பீர் முகமது கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள், விருப்பு மனு அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
 
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, சென்னையை சேர்ந்த போலீஸ் கமிஷனர், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவதாக மனு அளித்து போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
 
சென்னை மதுவிலக்கு உதவி கமிஷனராக பதவி வகிப்பவர் பீர் முகமது. அவர் கடந்த 3ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து, திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக மனு அளித்தார்.
 
ஒரு போலீஸ்காரர் மனு கொடுத்ததை பார்த்த அதிமுக தொண்டர்களும், அங்கிருந்த காவலர்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.
 
இதுபற்றி அவரிடம் கேட்ட போது “அதிமுக கட்சி உதயமானதில் இருந்தே எனது குடும்பம் அனைவரும் அந்த கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டு வருகிறோம். எனது அண்ணன் சுல்தான் அலாவுதீன், திருப்பூரில் அதிமுக பகுதி செயலாளராக பதவி வகித்தவர்.
 
நான் போலீசில் சேருவதற்கு முன்பே, அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்திருக்கிறேன். எனவே தற்போது தேர்தலில் போட்டியிட விரும்பி என் விருப்ப மனுவை அளித்திருக்கிறேன். எனக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
 
இந்த நிலையில், காவல்துறை பணியில் இருந்து என்னை கட்டாய விடுப்பு கொடுத்து, சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க, அப்பத்தான் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நிற்க வாய்ப்பு கிடைக்கும் என சென்னை உதவி போலீஸ் கமிஷனர் பீர் முகமது, தமிழக டிஜிபிக்கு மனு அளித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்