மருத்துவ கல்வி பயில ஏழை மாணவனுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (23:59 IST)
புதுக்கோட்டையை சேர்ந்த ஏழை மாணவர் மருத்துவ படிப்புக்கு ரூ.50 ஆயிரம் கல்வி கட்டணத்தை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான  ஜெயலலிதா வழங்கினார்.
 

 
இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 
 
புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு சுண்டாங்கி வலசை கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா என்பவர், தனது மகன் ஜி.தினேஷ்குமாருக்கு நெல்லை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
ஆனால், தங்களது குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலை காரணமாக கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை உள்ளதாகவும், எனவே, தனது மகன் படிப்பதற்கு நிதி உதவி வேண்டி அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
 
எந்த ஒரு மாணவ, மாணவியரும் கல்வி பயில நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று, முதலமைச்சர் ஜெயலலிதா, சகுந்தலாவின் கோரிக்கையை ஏற்று, டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து கல்லூரிக் கட்டணத்தை உடனே  செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் தினேஷ்குமாரிடம் முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம் உள்பட அத்தியாவசிய செலவுகளுக்கும் என மொத்தம் ரூ.50 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவ கல்வி பயில நிதி உதவி செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாணவன் தினேஷ்குமார், அவரது தாயார் சகுந்தலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும்  நன்றி தெரிவித்துக் கொண்டனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்