ஏலச்சீட்டு நடத்தி ரூ.41 லட்சம் மோசடி செய்த தம்பதி: பரபரப்பு வாக்குமூலம்

செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (11:00 IST)
ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்த, மாங்காட்டை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை சூளைமேடு பெரியார்பாதை பகுதியைச் சேர்ந்த என்.அரிதாஸ் மற்றும் பலர் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜை மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
 
அந்த மனுவில் "சென்னை மாங்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தெரு, பரண புதூர், சாந்தி நகரை சேர்ந்த பிரபு ராஜா அவருடைய மனைவி புவனியாஸ்ரீ (எ) புஷ்பா ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி ரூ.41 லட்சம் வரை தங்களிடமும், பகுதி மக்களிடமும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
 
தற்போது தலைமறைவாகி உள்ள அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
 
இது குறித்து, உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய குற்றப் பிரிவு சீட்டு மற்றும் கந்து வட்டி தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ஜார்ஜ், உத்தரவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் எஸ்.ஜெயகுமார் அறிவுரைப்படி, மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்து வட்டி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் எம்.கருணாநிதி தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.
 
இது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபுராஜ், புஷ்பா ஆகியோரை கைது செய்தனர்.
 
அந்த தம்பததியினர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
 
குடும்ப செலவுக்கும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் 2005 ஆம் ஆண்டு முதல் மாதாந்திர ஏலச்சீட்டை நடத்த தொடங்கினோம். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் பல குழுக்களை தொடர்ந்து நடத்தினோம்.
 
காலப்போக்கில் ஏலச்சீட்டு பணத்தை எடுத்து ஆடம்பரமாகவும், சொத்து சேர்ப்பதற்காகவும் செலவு செய்துவிட்டோம். இதனால் மாதாந்திர ஏலச்சீட்டு உறுப்பினர்களுக்கு அவர்கள் கட்டிய பணத்தை திருப்பி தர முடியாமல் போனது. பணம் கட்டியவர்கள் தினமும் வீட்டுக்கு வர தொடங்கியதால் தலைமறைவாகிவிட்டோம். இவ்வாறு அவர்கள் வாக்கு முலம் கொடுத்தனர்.
 
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்