நேற்று தமிழகத்தில் 1,927 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் சுமார் 2000ஐ நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,927 பேர்களில் 1,390 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,973 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாகி வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து பேட்டியளித்துள்ளார்,
அவர் கூறியதாவது, கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்த்து காய்ச்சி பருகலாம் எனவும் ஆரோக்கிய டிப்ஸ் கொடுத்துள்ளார்.