பாலியல் பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கதறல்

வெள்ளி, 13 மார்ச் 2015 (10:52 IST)
ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நீதிபதி முன்னிலையில் இளம்பெண் அழுது கதறியபடி கூறினார்.
 
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் 21 வயதுடைய இளம்பெண். அவர் பி.காம் பட்டதாரி. அவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில், அவருக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துத் தருவதாகக் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சுரேஷ் என்பவர் சில ஆவணங்களையும், செல்போன் எண்ணையும் வாங்கியுள்ளார். 
 
இதையடுத்து, செல்போனில் அந்த இளம்பெண்ணை பலமுறை தொடர்பு கொண்ட சுரேஷ் அவரிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளம் அந்த பெண்ணை சினிமாவுக்கு கூட்டிச் சென்ற சுரேஷ் படம் முடிந்தவுடன் தனது வீட்டுக்கு டீ அருந்துவதற்காக அழைத்துள்ளார்.
 
அங்கு சென்ற அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை அந்தப் பெண்னிடம் காட்டி கூப்பிடும்போதெல்லாம் வரவேண்டும், இல்லையென்றால் இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்றும் தந்தையை கார் ஏற்றி கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 
 
இந்நிலையில், அந்தப்பெண் கர்ப்பமானார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். 
 
இந்தப் புகாரின் பேரில், சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சுரேஷ் தாக்கல் செய்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, சுரேஷ் 9ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர். அவர், தான் வங்கியில் வேலை பார்ப்பதாகப் பொய் சொல்லி அந்தப் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணிடமே இதை கேட்கலாம் என்றார்.
 
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை நீதிபதியிடம் அழுதபடி தெரிவித்தார். மேலும், தன்னை ஏமாற்றியதுபோல் வேறு எந்த பெண்ணையும் இவர் ஏமாற்றிவிடக் கூடாது என்றும் அவர் நீதிபதியிடம் கூறினார்.
 
இதையடுத்து சுரேஷின் ஜாமீன் மனுவை  தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்