காய்கறி வாங்க ஆளே வரவில்லை.. தக்காளி, வெங்காயம் விலை சரிவு..!

Siva

புதன், 16 அக்டோபர் 2024 (11:34 IST)
சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த உடனே, பொதுமக்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று மொத்தமாக காய்கறிகளை வாங்கியதாக தகவல் வெளியானது. குறிப்பாக, தக்காளி மற்றும் வெங்காயத்தை ஒவ்வொரு நபரும் கிலோ கணக்கில் வாங்கியதாகவும், இதனால் மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயத்தின் விலை உயர்ந்ததோடு, முழுமையாக காலியாகி விட்டதாகவும் தெரிந்தது.

இந்த நிலையில், நேற்று சிலர் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை மொத்தமாக வாங்கி வீட்டில் சேமித்து வைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வராமல் ஆந்திரா பக்கம் திரும்பிய நிலையில், சென்னையில் மழை முழுமையாக இல்லை. சென்னையில் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், ஏற்கனவே வாங்கி வைத்த காய்கறிகள் இன்னும் ஒரு வாரத்துக்கு வரும் என்பதால் யாரும் காய்கறி கடைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் யாரும் காய்கறி வாங்க வரவில்லை, மிகவும் குறைந்த கூட்டமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது 90 ரூபாய்க்கு விற்பனையானாலும், யாரும் வாங்க வரவில்லை என வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். அதேபோல், வெங்காயம் உட்பட மற்ற காய்கறிகளின் நிலையும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்