சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாடுகள் அதிகமாவதால் பொதுமக்களில் பலர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். டிராபிக் பிரச்சனை இல்லை, டிராபிக் போலீஸ் கெடுபிடி இல்லை, சரியான நேரத்தில் குளுகுளு ரயில் பெட்டியில் சென்றடைய முடியும் என்பதால் பலரும் மெட்ரோ ரயிலை நோக்கி செல்கின்றனர்.
மேலும் மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கிய பின்னர் நாம் செல்ல வேடத்திற்கு செல்ல சைக்கிள், ஆட்டோ, வேன் உள்பட வசதிகளை மெட்ரோ நிர்வாகமே செய்து வருவதால் பயணிகளுக்கு பெரும் வசதியாக உள்ளது
இந்த நிலையில் மேலும் ஒரு வசதியாக குளுகுளு ஏசி வேன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தரமணி வரை குளுகுளு வசதி கொண்ட டெம்போ வேன், 20 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுகிறது. வார வேலை நாட்களில் அரை மணி நேர இடைவெளியில் இந்த டெம்போ இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை தொடங்கப்படும் இந்தச் சேவையை தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள 32 இடங்களில் இருந்தும், பயணிகள் வசதிக்காக கார், வேன், ஆட்டோ வசதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தரமணியில் பணிபுரியும் ஐடி ஊழியர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது