கருவுற்ற 15 வயது பள்ளி மாணவியின் கர்ப்பத்தை கலைக்க உத்தரவு

புதன், 18 மார்ச் 2015 (09:53 IST)
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கருவுற்ற 15 வயது சிறுமியின் கருவை கலைப்பது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மருத்துவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 
கற்பழிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ’ஊரில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, கோவில் கல்வெட்டில் பெயர் சேர்க்கவில்லை என்று சசிகுமார் என்பவர் என்னிடம் தகராறு செய்தார்.
 
அதற்காக என்னை பழிவாங்குவதாக கூறிய அவர், கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் வகுப்பு படிக்கும் தனது 15 வயது என் மகளை வீடு புகுந்து சசிகுமார் கற்பழித்தார். இதில், தனது மகள் கருவுற்றார். இந்நிலையில், என் மகளின் கருவை கலைக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களிடம் முறையிட்டேன்.
 
ஆனால், அவர்கள் கருவை கலைக்க மறுத்துவிட்டனர். மேலும், நீதிமன்றத்தில் தடையில்லா சான்றிதழ் பெற்று வரும்படி அவர்கள் கூறினார்கள். எனவே, கருவை கலைக்க டாக்டர்கள் மறுத்தது சட்டவிரோதமானது. கருவை கலைக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
 
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம், ‘கரு கலைப்பு சட்டத்தின்படி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, தகுந்த நடவடிக்கையை விரைவாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்