விலங்குகள் நல ஆர்வலரான ராதா ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ’பக்ரீத் பண்டிகைக்காக தமிழகத்திற்கு ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுவதாகவும், இது விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் குற்றம் என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ’ஆடுகளை வெட்டுவது போல ஒட்டகங்களுக்கும் பிரத்யேக அறுவைக் கூடங்கள் இருந்தால் மட்டுமே ஒட்டகம் வெட்டுவதை அனுமதிக்க முடியும் என்றும், தமிழகத்தில் அப்படியொரு ஏற்பாடு இல்லாததால், ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்க முடியாது’ என்றும் கூறி விட்டனர்.
மேலும், இந்த வழக்கில் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் என அனைவரும் தங்களது வாத, பிரதிவாதங்களை 3 பக்கத்திற்கு மிகாமல் அறிக்கையாகச் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.