இரண்டு நாட்களுக்கு பலத்த மழை : வானிலை மையம் எச்சரிக்கை

திங்கள், 7 டிசம்பர் 2015 (08:02 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 
 
சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த வட கிழக்கு பருமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திருக்கிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் நவம்பர் மாதம் 108.8 செ.மீ மழை பெய்துள்ளது. 
 
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் ஏற்கனவே கன்னியாகுமரியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகளால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
இதுகுறித்து நேற்று தகவல் கூறிய தென் மண்டலத் தலைமை இயக்குநர் எஸ்.பாகுலேயன் தம்பி,  “கடந்த சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்து, கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
 
இந்த இரு நிலைகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில், பலத்த, மிக பலத்த மழையும் பெய்யும். 
 
சென்னை மாநகரில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒரு சில நேரங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும். கடலோரப் பகுதியில், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்” என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்