சென்னை மின்சார ரயிலில் தீ விபத்து

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (08:26 IST)
சென்னையில் மின்சார ரயிலில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை.


 

 
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இவு 11.10 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில், கோட்டை ரயில் நிலையம் அருகே வருந்த போது, ரயிலின் 6 ஆவது பெட்டியின் மேல் தீப்பொறி பறந்தது.
 
அத்துடன் பெட்டிக்குள் இருந்து புகை வெளியேறியது. இதைக் கண்டதும் பயணிகள் அச்சமடைந்தனர்.
 
அப்போது, அந்த பெட்டி  தீப்பிடித்து எதியத் தொடங்கியது. இந்நிலையில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ரயில் நின்றது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறங்கினர்.
 
இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலகம் மற்றும் உயர் நிதிமன்ற தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழிக்கப்பட்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
 
இந்த தீ விபத்தில் அந்த பெட்டி லேசாக சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் கடற்கரை – தாம்பரம் பாதையில் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
 
இது குறித்து தகவல் அறிந்த தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.
 
என்ஜின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ரயிலில் இருந்து உடனடியாக பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
 
இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. மின் கசிவு இருந்ததாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.
 
இந்நிலையில், இரவு 11.45 மணிக்கு மேல் மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன. தீப்பிடித்த ரயில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்