ஒரே நாளில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

செவ்வாய், 27 அக்டோபர் 2015 (11:04 IST)
சென்னை, தாம்பரம், திருவொற்றியூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் மர்ம காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை அடுத்த தாம்பரம் அருகே பொம்மியம்மன் நகரை சேர்ந்த 5 வயதுடைய ஜெயசீலன் குழந்தை ஆயிஷா சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். சில நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அந்த குழந்தை இறந்து விட்டது.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாகீர் . இவர் தோல் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இதுதொடர்பாக தாம்பரம் சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், இருவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.  டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை. எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று கூறினார்கள்.

இதனை தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பூதகானந்தன் மகன் ஹரிகரன் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இந்நிலையில் ஹரிகரன் 4 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு

அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தான். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிகரன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தவிட்டான். இவனுடைய தம்பி கார்த்திகேயனும் மர்ம காய்ச்சலால் தாக்கியுள்ளது அவன் தற்போது தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

திருத்தணியில் ராஜம்மாள், பொன்னம்மாள் ,மங்கம்மாள் வயதான மூவரும் சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள், மங்கம்மாள் ஆகியோர் நேற்று திடீரென இறந்துவிட்டனர்.. வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட பொன்னம்மாளும் நேற்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து மருத்துவர்களிடம் கேட்கும் போது இந்த காய்ச்சல் குறித்து தகவல் அளிக்க மறுத்துவிட்டனர்,
 

வெப்துனியாவைப் படிக்கவும்