செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு: சென்னை-ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிப்பு

செவ்வாய், 24 நவம்பர் 2015 (11:30 IST)
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சென்னை - ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.


 

 
கடந்த சில வாரங்களாக வட தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
 
அதன்படி, சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஆகியவை நிரம்பியுள்ளன. இதனால், அந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 
 
இந்நிலையில், நேற்றுமாலை பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
 
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4,000 கனஅடியிலிருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து,  பாதுகாப்பு கருதி சென்னை - ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்