சிறுத்தை கடித்துக் குதறியதில், கிளீனர் பரிதாப பலி; திம்பம் பகுதியில் பீதி

வியாழன், 27 நவம்பர் 2014 (12:42 IST)
திம்பம் மலைப் பாதையில் இன்று அதிகாலை சிறுத்தை தாக்கியதால், வேன் கிளீனர் பரிதாபமாகப் பலியானார்.
 
கர்நாடக மாநிலம் நொக்கனூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவர் வேன் கிளினராகப் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் நொக்கனூரில் இருந்து வேனில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு டிரைவர் ஜடையனுடன் கோயம்புத்தூர் செல்ல, திம்பம் மலைப்பாதை வழியாக வந்தனர்.
 
அப்போது திம்பம் மலைப் பாதையில் 25ஆவது கொண்டை ஊசி வளைவில், வேன் பழுதடைந்து நின்றது. இதனால் மாற்று வேன் வரவழைத்து, தன் வேனில் இருந்த காய்கறிகளை மாற்று வேனில் மாற்றினார்கள். அந்தச் சமயத்தில் கிளீனர் சீனிவாசன், இயற்கை உபாதை கழிக்க வனப் பகுதிக்குள் சென்றார். அந்தச் சமயத்தில் அங்குள்ள புதரில் இருந்த சிறுத்தை ஒன்று, சீனிவாசன் மீது பாய்ந்து கடித்துக் குதறியது. இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், பயந்து ஓடினர். பின் பண்ணாரி செக்போஸ்டில் உள்ள போலீஸாரிடம் இது குறித்துக் கூறினர்.

 
போலீஸார் மற்றும் வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்த சீனிவாசன் உடலை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்தால், திம்பம் மலைப் பாதையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பீதியடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், திம்பம் மலைப் பாதையில் வனக் காப்பாளர் உட்பட இருவரை சிறுத்தை அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்