தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய், 6 மே 2014 (19:47 IST)
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தீவிரமடைந்துள்ளது.
 
வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையும், சில நேரங்களில் மிக கனமழை பெய்யலாம்.
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில நேரங்களில் மழை பெய்யக்கூடும். கடல் காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், கேரளம் மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை அய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்