கணக்குப் போட்டோம் ராம்குமாரை கச்சிதமா தீர்த்துக் கட்டிட்டோம்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:13 IST)
ராம்குமார் குமார் சிறையில் மரணமடைந்ததை அடுத்து அவரது மரணம் தற்கொலை என காவல்துறை, சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டாலும், அதில் உள்ள முக்கியமான சில சந்தேகங்களை வைத்து பலரும் அது தற்கொலை அல்ல கொலை எனவும், அதில் உள்ள பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


 
 
இந்த விமர்சனங்களை பொதுமக்கள் மட்டுமல்லாமல், பல பிரபலங்களும் கூறி வருகின்றனர். சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் தங்களது கருத்தை கண்டனத்துடனும் பதிந்து வருகிறார்கள்.
 
அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
 
நீதிபதி சந்துரு
 
ராம்குமாரின் மரணத்துக்குச் சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு. ராம்குமாரின் மரணம் வழக்கை விரைவில் முடிப்பதற்கான முயற்சி. சிறையில் பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் நிலையில் ராம்குமாரின் உயிரிழப்பு சந்தேகம் அளிக்கிறது. சிறையில் நிகழும் மர்மங்களுக்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு. நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் சிறையில் அடைக்கும்போது மட்டும் எப்படி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அனைத்து சிறைகளிலும் வயர்கள் வெளியில் இருக்கும்படி இருக்காது சுவரில் பதிக்கப்பட்ட நிலையில்தான் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
 
வின்செண்ட் ராஜ் - மனித உரிமை செயற்பாட்டாளர்
 
சிறையில் ராம்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்று முழுமையான சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லை. ராம்குமார் பிணையில் வெளிவந்து விட்டால் போலி மோதலில் சுட்டுக்கொல்லுவது சிரமம் என்பதினால் சிறையில் போலி தற்கொலை நாடகத்தை போலீஸ் நடத்தி இருக்கிறது. இந்த வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி விட்டால் காவல்துறையின் மானம் காற்றில் பறக்கும். ஆகவே கொல்லுவதில் மூலம் இரண்டு தந்திரங்களை போலீஸ் கடைபிடித்து இருக்கின்றனர். ஒன்று… ராம்குமார்தான் குற்றவாளி என்று நிரூபிக்க போராட வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு… சமூகத்தில் குற்றவாளியை கொன்று விட்டோம் என்கிற மாய தோற்றத்தை உருவாக்குவது. சிறையில் ஒரு கைதி தற்கொலை செய்து கொள்ளுகிற நிலை இருக்கிறது என்றால், அந்த சிறையின் தரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது? தமிழக காவல் துறை இயக்குநர், மத்திய சிறை துறை கண்காணிப்பாளர், இதன் விசாரணை அதிகாரிகள் அனைவரும் பணி இடை நீக்கம் செய்யப்படவேண்டும். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவு இட வேண்டும். விசாரணை நடத்தி தண்டனை பெற்று கொடுக்க திறன் இல்லாத தமிழக போலீஸ் குறித்து வெட்கப்படுகிறேன். இதுபோன்ற கொலைகளை நீதிமன்றம் கண்டும் காணாமலும் இருந்தால் இதைவிட பெரிய அநீதி வேறு எது இருக்க முடியும்?.
 
Aadhavan Dheetchanya - எழுத்தாளர்
 
கணக்குப் போட்டோம் கச்சிதமா தீர்த்துக் கட்டிட்டோம். இனிமே யார் எதை வேணுமானாலும் கத்துங்க. கதறுங்க. கண்டனம் முழங்குங்க... அட, என்னமும் செய்துட்டுப் போங்க... எங்களுக்குத் தெரியும் ராம்குமார் திரும்பிவரப் போறதில்லேன்னு..."
 
- ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மமதையோடு இதைத்தான் சொல்ல விரும்புகிறார்கள்.
 
Saravanan Savadamuthu - பத்திரிகையாளர்
 
புரட்சித் தலைவியின் பொன்னான ஆட்சியில் இதுகூட நடக்கவில்லையெனில்தான் இது ஆத்தாவின் ஆட்சியா என்று சந்தேகமே வரும்… சிறை முழுக்க சிசிடிவி கேமிராக்கள் இருக்க, எந்த கேமிராவிலும் படாமல் வெற்றிகரமாக தற்கொலை செய்திருக்கும் ராம்குமாரின் சாமர்த்தியத்தை, தமிழக காவல்துறையினரே நிச்சயம் பாராட்டுவார்கள்.
 
சிறையில் அதி முக்கிய குற்றவாளி என்ற பெயரில் இருப்பவரையே பாதுகாத்து வைக்க முடியவில்லை என்றால், எதற்கு இத்தனை சிறை காவலர்கள்..?
 
இது கொலை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதை தானாகவே செய்வதற்கு எந்த அதிகாரியும் முன்வர மாட்டார்கள். மேலிட ஒத்துழைப்போ, உத்தரவோ இன்றி இதனை செய்திருக்கவே முடியாது!
 
இதற்கு நிச்சயமாக சிறைத்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். சிறைத்துறையை தன் வசம் வைத்துக் கொண்டு வீட்டில் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கும் மாநிலத்தின் முதலமைச்சரான ஆத்தாதான் இந்தப் பாவத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்!
 
குற்றம் நிரூபிக்கப்பட்டால்கூட 10 வருட தண்டனையோ அல்லது 14 வருட சிறை தண்டனையோ கிடைத்து ராம்குமார் தன்னுடைய மத்திம வயதிலாவது திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது ஒரேயடியாகசொர்க்க லோகத்திற்கு அனுப்பி வைத்திருக்கும் ஆத்தாவின் கொடுங்கோல்தனத்திற்கு என்ன பெயர்..?
 
இவ்வளவிற்கு பிறகும் இன்னும் நான்கைந்து பேர் "ஜெயலலிதாவின் தைரியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." என்று இதே முகநூலில் வெண்சிரிப்போடு சொல்வார்கள் பாருங்கள்..!
 
தமிழர்களின் டிஸைன் அப்படி..!.
 
Elamathi Sai Ram – ஊடகவியலாளர்
 
இந்நேரத்தில் ராம்குமார் குடும்பத்தினரிடம் ஒன்றை சொல்லத் தோன்றுகிறது...
 
"உங்கள் பிள்ளை குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் முன்பே சிறையில் தற்கொலை செய்துவிட்டதாக சுவாதி கொலையின் கதை முடிந்துவிட்டது. நாடே உற்றுநோக்கிய வழக்கில் காவல்துறை ராம்குமாரை பிடித்து குற்றவாளிஎன்று கூறியது நம்பினோம். கழுத்தை அறுத்துக்கொண்டான் எனக்கூறியது நம்பினோம். இப்போது சிறையில் தற்கொலை செய்துகொண்டான் எனக்கூறுகிறது.. நம்பி கடந்துதான் போவோம். இதற்கிடையில் ராம்குமார் நிரபராதியாகஇருப்பானோ...? என எங்களனைவருக்கும் இருக்கும் ஊகங்கள் காலத்திற்கும் உயிருடன்தான் இருக்கப்போகிறது... ஆகையால் இந்த உலகம் துாற்றுகிறபடி ஒரு மகனைப் பெற்றுவிட்டோமே என்ற எந்த குற்றவுணர்ச்சிக்கும்,குறுகுறுப்புக்கும் ஆளாகமல் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் என.."
அடுத்த கட்டுரையில்