போதை மாத்திரையுடன் 150 இளைஞர்கள் கைது : பொள்ளாச்சியில் பரபரப்பு
சனி, 4 மே 2019 (18:32 IST)
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் நடத்திவந்த ஒரு ரிசார்டில் இளைஞர்கள் பலர் கூடி போதை மருந்து உட்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள சேத்துமடையி கணேசன் என்பவருக்குச் சொந்தமான அக்ரி நெக்ஸ்ட் என்ற ஒரு ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்டில் மதுகுடித்துவிட்டு விருந்துகொண்டாட்டம் நடைபெறுவதாகக் கூறி கேரளாவில் வசிக்கும் சிலர் இதற்கு ஆள்களை சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் நேற்று இரவு இளைஞர்கள் பலர் தங்கள் சொகுசு வாகனத்தில் வந்து இரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போதையில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. வரம்பு மீறிய இளைஞர்கள் பிரச்சனை செய்ததால் போலீஸாருக்குத் தகவல் சென்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆனைமலை போலீஸார் அனைவரையும் கைதுசெய்தனர். கைதானவர்களிடம் போலிஸார் விசாரித்ததில் இளைஞர்களில் பாதிப்பேர் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.
தற்போது 150 பேரும் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரீசார்டின் உரிமையாளர் கணேஷ் மற்றும் அங்கு பணியாற்றியதாக இதுவரை சுமார் 6 பேர் மீது வழக்குப் பதிவு காவல்துறை முடிவுசெய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராராமணி இந்த ரீசார்டுக்கில் சீல் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.