மாணவிகள் மரணம்: கல்லூரி தாளாளரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (18:46 IST)
எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் கிணற்றில் மூழ்கி பிணமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் மர்மங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
 
முதலில் கிணற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டனர் என தகவல் வந்தது. இந்த நிலையில் நேற்று மாணவி ஒருவரின் பிரேத பரிசோதனையில் அவர்கள் நீரில் மூழ்கியதால் உயிரிழக்கவில்லை என சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
 
இந்நிலையில் சிபிசிஐடி காவல் விசாரணையில் இருக்கும் கல்லூரி தாளாளர் வாசுகியிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் சில சிக்கியதாக கூறப்படுகிறது. விசாரணையில் வாசுகி தனது காரில் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக கூறினார்.
 
இதனையடுத்து வாசுகியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பூட்டப்பட்டிருந்த அவரின் கார் கண்ணாடியை உடைத்து காவல் துறையினர், 3 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
 
ஒரு செல்போனை ஆய்வு செய்த காவல் துறையினர், மாணவிகள் மூன்று பேரும் உயிரிழந்த அன்று வாசுகி ஒரு நபருடன் ஐந்து முறை பேசியுள்ளது தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கார், செல்போன்கள், ஆவணங்கள் ஆகியவற்றை சிபிசிஐடி காவலர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்