தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை போராட்டம்: தமிழ் புலிகள் இயக்கம் அறிவிப்பு

சனி, 31 ஜனவரி 2015 (10:50 IST)
ஜாதி கலவரம் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள தமிழ் புலிகள் இயக்கம் அமைப்பு இதற்கு கடும் கண்டணம் தெரிவித்துள்ளதோடு, முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
 
இது குறித்து, தமிழ் புலிகள் இயக்க மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கூறியிருப்பதாவது:-
 
உலகிற்கு சுயமாரியாதையை கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார். அவர் வாழ்ந்த, தமிழகத்தில்தான் சாதி மோதல்களும், அடக்குமுறைகளும் அதிக அளவில் உள்ளது. இது தமிழகத்திற்கு அவமானம் என்பதைவிட மனித நாகரீகத்தையும், மூடநம்பிக்கையும் கற்றுக் கொடுத்த தந்தை பெரியாருக்கு அவமானம் என்றே கருதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
இந்தியாவிலே, ஜாதி மோதல்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. குறிப்பாக தென் மாவட்டத்தில்தான் அதிக ஜாதி மோதல்கள் நிகழ்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் தலித் மக்களை தாக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. பொதுவாக இந்த வகை தாக்குதல்கள் உள்ளூரிலே கட்டப் பஞ்சாய்த்து செய்யப்பட்டு மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன. 
 
கடந்த மூன்று ஆண்டுகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ள வழக்குகளை ஒப்பிடுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ரீதியிலான கொலைகள் 2013 ஆம் வருடம் 5ம், 2014 ஆம் வருடம் இதுவரை 10 கொலைகளும் நடைபெற்றுள்ளதாகவும், அதே போல், தூத்துக்குடி மாவட்டத்தில் 2013 ஆம் வருடம் சாதி ரீதியில் ஒரு கொலையும், 2014ம் வருடம் இதுவரை 3 கொலைகளும் நடைபெற்றுள்ளன.
 
திருநெல்வேலி நகரில் சாதி ரீதியாக 2012 ஆம் வருடம் ஒரு கொலையும், 2013 ஆம் வருடம்  2 கொலைகளும், 2014 ஆம் வருடம் இதுவரை 2 கொலைகளும் நடைபெற்றுள்ளன என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். 
 
இந்த கருத்து எந்த அளவு உண்மை உள்ளது என்பது தென்மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தென் மாவட்டத்தில் ஜாதி மோதல்கள் இல்லை என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகின்றார்.
 
ஒரு முதலமைச்சரே பொய் சொல்லலாமா, தமிழகத்தில் நடைபெற்றுள்ள சாதி மோதல்கள் குறித்த உண்மையான தகவல்களை வெளியிட முதலமைச்சரே வெக்கப்பட்டு மறைக்கின்றார். எனவே, தமிழக மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை விரைவில் முற்றுகையிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த தகவல் தமிழக உளவுத்துறை மூலம் தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்