பட்டாசு வெடித்து மாட்டிக் கொண்ட அர்ஜுன் சம்பத்: வழக்கு பதிந்த போலீஸ்

வியாழன், 10 நவம்பர் 2016 (20:16 IST)
பொது இடத்தில் பட்டாசுகள் வெடித்ததற்காக இந்து  மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது இரு பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


 

பிரதமர் மோடி செவ்வாய்கிழமை [08-11-16] இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதே சமயம் பிரதமரின் அறிவிப்பை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடினர். தமிழகத்திலும் இந்து மக்கள் கட்சி வரவேற்பதாக கூறி, இதனை கொண்டாடும் வகையில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் புதனன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக  பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் பொது இடத்தில் அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கூடியதற்காகவும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாண்ட குற்றத்திற்காகவும் இரு பிரிவுகளில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்