ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணை அழையுங்கள்....

வியாழன், 13 அக்டோபர் 2016 (17:47 IST)
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களுக்கும், தமிழக அரசு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும், ஏனோ பலர் தொடர்ந்து ஆம்னி பேருந்துகளிலேயே செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


 

 
அரசு பேருந்துகளில் அதிக கூட்டம் மற்றும் ஆம்னி பேருந்தில் ஏசி, தொலைக்காட்சி, சொகுசு மற்றும் பல வசதிகள் கிடைப்பதால், அதிக கட்டணம் கொடுத்தும் அதில் செல்ல பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பொது மக்களிடம் கொள்ளையடிக்கின்றனர்.
 
அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அவர்கள் வைப்பதே விலை. உதாரணத்திற்கு சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்ல ரூ.800 எனில், விழாக் காலங்களில் ரூ.1000 த்திற்கும் மேல் வசூலிக்கப்படுகிறது.
 
இதை யாரும் தட்டிக் கேட்பதில்லை. விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேறு வழி இல்லாதவர்கள் அந்த விலையை ஏற்றுக் கொண்டு பயணிக்கிறார்கள். ஆனாலும், அதை தட்டிக் கேட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு. இதுபற்றிய புகார்கள் வந்தாலும், அனைத்து பேருந்துகளையும் சோதனை போட முடியாத நிலை இருந்தது.
 
இந்நிலையில், அவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பற்றி புகார் கொடுக்க 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்