பேருந்து சக்கரத்தில் சிச்கி பள்ளி மாணவனின் கால்கள் நசுங்கின: செங்குன்றத்தில் சோகம்

சனி, 5 மார்ச் 2016 (09:14 IST)
செங்குன்றம் அருகே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனின் கால்கள் நசுங்கின, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம், பெருமாள்அடிபாதம் 7 ஆவது தெருவில் வசித்து வருபவர் நேதாஜி.
 
கூலி தொழிலாளியான இவருடைய மகன் கிருஷ்ணன். இவர், பம்மதுகுளத்தில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில், கிருஷ்ணன், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் ஏறினார்.
 
அப்போது, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணன், முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
 
அந்த பேருந்து, பம்மதுகுளம் நாகாத்தம்மன் கோவில் அருகே சென்ற போது, நிலைதடுமாறிய கிருஷ்ணன், தவறி கீழே விழுந்தார்.
 
அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவரது 2 கால்களும் நசுங்கின. இதனால் ஏற்பட்ட வலியால் துடி துடித்து அழுத கிருஷ்ணனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்