ஆவடி குண்டு மீரட்டல் வதந்தி பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை

வெள்ளி, 2 மே 2014 (13:36 IST)
ஆவடி ரயில் நிலையம், சென்னை தனியார் வணிக வளாகம் உட்பட பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மர்ம மனிதர்கள் சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வதந்தி என்று தெரியவந்துள்ளது. தவறான வகையில் மிரட்டல் விடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
சென்னை ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு மோப்பநாய்களுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் திருநின்றவூர் சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தினர்.
 
இதேபோல சென்னை தனியார் வணிக வளாகம் உட்பட பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் சிலர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
 
இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் குண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், அவை வெறும் வதந்தி என்று தெரிய வந்துள்ளது.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, சென்னையின் பல இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சென்னை மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலால் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
 
எனவே, வெடிகுண்டு குறித்து வதந்திகளை பரப்புவோர், தவறான வகையில் மிரட்டல் விடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்