பாஜக இளைஞர் அணி தலைவர் அன்பு ரமேஷ் படுகொலை: கவின்கமல்குமார் கண்டனம்

புதன், 25 நவம்பர் 2015 (04:44 IST)
சிவகங்கை மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் அன்பு ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் கவின் கமல்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் கவின் கமல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பாஜக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் அன்பு ரமேஷ் பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் படுகொலையை பாஜக இளைஞர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
இது திட்டமிட்ட படுகொலையாகவே தெரிகிறது. ஆனால்,சமீபகாலமாக தமிழ்நாட்டில் அதிமுக அரசு பதவி ஏற்றதிலிருந்தே இப்படிப்பட்ட படுகொலைகள் காவல்துறை, நீதிமன்றம், சமூகம் இவற்றைப் பற்றி எந்த பயமும் இல்லாமல் தடையின்றி தொடர்கிறது. இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இருப்பது பற்றிய ஐயம் எழுப்புவதாகவே அமைந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்டு வருகின்றனர். சில முக்கியத் தலைவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை முயற்சியிலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.
 
இப்படிப்பட்ட அரசியல் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவது தமிழக மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. பாஜக பொறுப்பாளர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
 
ஆனால், ஆளும் அதிமுக அரசு அரசியல் கட்சிகள் மீது அவதூறு வழக்கு போடுவதில் காட்டும் தீவிரத்தில் பத்தில் ஒரு பங்கை கூட சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காட்டியிருந்தால் இது போன்ற படுகொலைகளை தடுத்து, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பராமரித்திருக்க முடியும்.
 
பாஜக பொறுப்பாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது சாதாரணமானதாக தோன்றவில்லை. எனவே, அன்பு ரமேஷ் அவர்களது படுகொலையின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி கொலைக்கு காரணமானவர்களை உடனே  கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக இளைஞரணி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்