தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. இந்நிலையில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து காரில் திருத்தணி கிளம்பி சென்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு திருத்தணி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் திருத்தணி சென்ற எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரையை தொடங்க முயற்சித்தனர். இதனால் போலிஸார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்து மாலை விடுவிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.