22 நாள் தாடியை எடுக்கப் போகும் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்

சனி, 18 அக்டோபர் 2014 (16:21 IST)
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் வரை மழிக்கப் போவதில்லை என மவுனமாக உறுதி எடுத்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு விரைவில் தங்கள் தாடியை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜெயலலிதா சிறைக்குச் சென்றதிலிருந்து அதிமுக வட்டாரம் களையிழந்து போனது. அதிமுக தலைமை அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல இடங்களிலும் கனத்த மவுனம் நிலவியது. பதவியேற்பு விழாவிலேயே கண்ணீர் விட்ட கழகத் திலகங்கள், அதைத் தொடர்ந்து சோகமாகவே காணப்பட்டனர்.

துக்க வீட்டிலும் தங்கள் வேண்டுதலுக்காகவும் தாடியை எடுக்காமல் விடுவது, தமிழர்களின் மரபு. அதைப் பின்பற்றிப் பலரும் தாடி வளர்க்கத் தொடங்கினர்.
 
முதலமைச்சர் பன்னீர்செல்வத்தில் தொடங்கி, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத் துறை அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் தாடியுடனே காணப்படுகின்றனர். அவர்களது அலுவலகத்தில் உள்ள சிலர்கூட தாடியுடன் உள்ளனர். 
 
இந்நிலையில், ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இவர்களிடம் உற்சாகம் மீண்டுள்ளது. ஜெயலலிதாவைச் சந்தித்து பிறகு, தாடி என்ற சிறைக்குள்ளிருந்து இவர்களின் முகங்களுக்கு விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்