இனி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டால் கைது - கமிஷனர் ஜார்ஜ் அதிரடி

புதன், 7 அக்டோபர் 2015 (16:52 IST)
சென்னையில் மாஞ்சா நூல் விற்றாலோ, அதில் பட்டம் செய்து விட்டாலோ அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வடசென்னையில் சிறுவன் ஒருவன் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பலியானான். இதையடுத்து மாஞ்சா நூலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை சென்னை போலீசார் எடுத்துவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் மாஞ்சா நூல் விற்றாலோ, அதில் பட்டம் செய்து விட்டாலோ அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று முதல் 60 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். மாஞ்சா நூல் விற்பனை செய்தாலோ, இறக்குமதி செய்தாலோ, அதை பயன்படுத்தி பட்டம் விற்றாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.
 
மேலும், மாஞ்சா நூல் பயன்பாட்டினால், கடந்த மூன்று வருடங்களில் நான்கு பேர் இறந்திருப்பதாகவும், நடப்பு ஆண்டில் இதுவரை 190 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஜார்ஜ் கூறினார்.
 
மாஞ்சா நூலை பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், பட்டம் விடுபவர்கள் பற்றி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100, 044-2561 5086 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் புகார் தெரிவிப்பவர்களின் பெயர்களை ரகசியம் காக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்