பாஸ்போர்ட் பெற நேர்முகத் தேர்வுக்கான கால அவகாசம் குறைப்பு: பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் தகவல்

வியாழன், 21 மே 2015 (17:46 IST)
பாஸ்போர்ட் பெறுவதற்கு, நேர்முகத் தேர்வுக்கான முன்அனுமதிக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் `சமூக தணிக்கைப் பிரிவு’ என்ற பெயரில் புதிய தகவல் உதவி மையம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், பொது மக்களின் குறைகள் உடனே கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.
 
இதன் காரணமாக, புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை தற்போது 2 ஆயிரத்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இதன் மூலம், நேர்முகத் தேர்வுக்கான முன்அனுமதி பெறும் காலஅவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரம் இன்றி விரைவாக பாஸ்போர்ட் பெறமுடியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்