ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 4 மாதத்திற்கு நீட்டிப்பு - 3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வியாழன், 18 டிசம்பர் 2014 (12:32 IST)
ஜெயலலிதா சொத்துகுவிப்பு ஜாமின் மனுவை 4 மாதத்திற்கு நீட்டித்தும், வழக்கு விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெங்களூரில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் 2014 செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அன்றே 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, கடந்த 7ஆம் தேதி ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்.
 
பின்னர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் 7 ஆம் தேதி நீதிபதி சந்திரசேகர் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்.
 
கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால் ஜெயலலிதா சார்பில் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில் அந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து முன்பாக 58ஆவது மனுவாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட இடைக்கால நிபந்தனை ஜாமீன் 4 மாதம் அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
மேலும், ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கை 3 மாதத்திற்குள் விசாரிக்கவும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட்டுள்ளது. ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சுப்ரமணியசாமிக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டம், ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டால் நீதிமன்றத்தில் தெரிவிக்க சுப்ரமணியசாமிக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்