ஜெயலலிதா-அழகிரி கூட்டு: திமுக மாவட்ட செயலாளர்கள் ஆவேசப் பேட்டி

சனி, 5 செப்டம்பர் 2015 (11:15 IST)
கடந்த சில தினங்களாக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக மு.க அழகிரி அதிரடியாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். இதனால் திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளார்கள் கொந்தளித்துள்ளனர்.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் வி.வேலுச்சாமி, தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, முன்னாள் அமைச்சர்  பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் ஜெயலலிதாவின் தூண்டுதலின்  பேரிலேயே மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி பேசி வருவதாக திமுக மாவட்டச் செயலாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கூறிய அவர்கள் திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார். ஆட்சியில் இல்லாத  போது வழக்குகளில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியின் கையாளாக மாறிவிடுகிறார். மேலும் பொய்யான கருத்துகளை தெரிவித்து கட்சியில்  குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

மாநகராட்சி தேர்தலில் தனது ஆதரவாளர்களை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடச் செய்து  திமுக வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமானார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராகப்  பிரச்சாரமே செய்தார். கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் தான் அழகிரி இப்படி அவதூறாக பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசி ஆளுங்கட்சியின் தயவை எதிர்பார்த்து திமுகவுக்கு துரோகம் செய்கிறார். அவரது இந்த இரட்டை  வேடத்தை தொண்டர்கள், மக்கள் புரிந்துள்ளனர்.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத அழகிரி ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை.  இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்