சசி பெருமாள் வழியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (02:48 IST)
சசி பெருமாள் வழியில்  ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டை அடியோடு நாசப்படுத்தி வருகின்ற மது அரக்கனின் பிடியில் இருந்து விடிவிக்க, தனது 16 வயதில் இருந்து இடைவிடாது போராடிய மது ஒழிப்புப் போராளி உத்தமத் தியாகி சசிபெருமாள், அந்த இலட்சத்திற்காக அறப்போர் நடத்தி உயிர் பலி ஆகியுள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் ஊர்மக்களோடு சேர்ந்து சசிபெருமாளும் ஜூன் 30 ஆம் தேதி போராடியபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கடந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் அந்த ஊர் மதுக்கடையை மூட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆணை பிறப்பித்தும், தமிழக அரசு அதனைத் துட்சமாகக் கருதி டாஸ்மாக் கடையைத் தொடர்ந்து நடத்தியது.
 
ஜூலை 31 ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்ற தீப்பந்த போராட்டம் ஊர்மக்கள் அறிவித்தனர். தமிழக அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. இதனால் தியாகி சசிபெருமாள் 200 அடி உயர் அலைபேசி கோபுரத்தின் உச்சிக்கே சென்று கையில் தீப்பந்தத்தை வைத்துக் கொண்டு, அதற்கு உடனே தீ வைக்காமல் டாஸ்மாக் கடையை மூடுமாறு கோரிக்கை வைத்தார்.
 
ஐந்து மணி நேரம் இந்தப் போரட்டம் நடந்தது. தமிழக அரசு வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அலட்சியம் காட்டினர். பின்னர்ச் சசிபெருமாளை கயிறுகளைக் கட்டி கீழே கொண்டு வந்து இறந்துவிட்டார் என அறிவித்தனர். 
 
சசிபெருமாள் உடல் எங்கும் இரத்தம் படிந்திருந்தது. மூக்கிலும் இரத்தம். உடனே சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அவரது உடலை பார்த்துவிட்டு இது இயற்கை மரணம் அல்ல என்று வைகோ குற்றம் சாட்டினார். நேற்று இரவிலேயே பிரேத பரிசோதனை செய்யத் தமிழக அரசு முயற்சி செய்தது. வைகோ கடுமையாக எச்சரித்ததன் பின்னரே அந்த முயற்சி கைவிடப்பட்டது.
 
தியாகி சசிபெருமாளின் கோரிக்கையைத் தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். கோடிக்கணக்கான தாய்மார்களின் கண்ணீருக்கும், இளைய சமுதாயத்தினருடைய சீரழிவிற்கும் காரணமான மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். இதனை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளுங்கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சியினர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு என அறிவித்துள்ளனர்.
 
எனவே, அதே ஆகஸ்ட் 4 இல் தமிழகம் முழுவதிலும் முழு அடைப்பு நடைபெற வேண்டுகிறோம். அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள், தாய்மார்கள், மாணவர்கள், குறிப்பாக வணிகப் பெருமக்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.
 
மாமனிதர் அப்துல் கலாம் மறைவுக்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களும், சிறு அங்காடி முதல் பெரிய நிறுவனம் வரை வணிகப் பெருமக்கள் தாங்களாக முன்வந்து முழுக் கடை அடைப்பு நடத்தினர்.
 
ஐந்து நாட்களுக்குள் மீண்டும் கடை அடைப்புச் செய்வது பொருளாதாரச் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தாலும், தெலுங்கானா போராட்டம் போன்ற போராட்டங்களில் சில மாநிலங்களில் தொடர்ந்து இடைவிடாத முழுக் கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
 
எனவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தியாகி சசிபெருமாளினுடைய விருப்பத்தை நிறைவேற்றவும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் எனப் பணிவுடன் இருகரம் கூப்பி வேண்டுகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்