ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்கள் மீது ஆந்திர போலீஸ் கொடூர தாக்குதல்

புதன், 10 டிசம்பர் 2014 (14:51 IST)
திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர காவல்துறையினர் கடுமையாக தாக்கி, அவர்களை கைது செய்தனர்.
 
திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே வந்துள்ளார். இந்நிலையில், திருமலையில் ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர காவல்துறையினர் காட்டுமிராண்டுத்தனமாக கடுமையாக தாக்கி, செய்தியாளர்களின் கேமரா, செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து உடைத்தும், அவற்றை பறித்துச சென்றுள்ளனர்.
 
மேலும் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர்களை சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகமாக இருக்கும் திருப்பதி பாபவிநாசம் பகுதியிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வேனில் கொண்டு சென்று இரவு 3 மணி அளவில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
 
ஆந்திர காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களுக்கு ஆந்திர அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
இதனிடையே சாமி தரிசனம் முடிந்து வந்த ராஜபக்சேவுக்கு மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டினர். கறுப்புக் கொடி காட்டிய மதிமுகவினர் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த தமிழக செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்