ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையைத் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் - தேவ கெளடா

ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (08:16 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் உள்ள ஜெயலலிதா மீதான, வழக்கு விசாரணையை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்று, முன்னாள் பிரதமர் தேவ கெளடா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
 
“சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ளதால், கர்நாடகம்-தமிழக மாநிலங்களின் நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் அதிகரித்து வருகிறது. எனவே, அவர் மீதான வழக்கு விசாரணையைத் தமிழகத்துக்கே மாற்ற வேண்டும்.
 
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, அவர் மீதான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதில் நியாயமும் இருந்தது.
 
ஆனால், இப்போது விசாரணை முடிந்து, தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான வழக்கை தமிழகத்துக்கே மாற்ற வேண்டும்.
 
பெங்களூரில் ஜெயலலிதாவை சிறையில் அடைத்து வைத்துள்ளதால், கர்நாடக காவல் துறையினருக்குப் பணிச் சுமை அதிகரித்துள்ளது. மேலும், தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, அவரை சிறையிலிருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையையும் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும்.
 
ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிச் சுமையை கர்நாடகம் ஏற்காது“ என்று தேவ கெளடா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்