கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது

திங்கள், 29 செப்டம்பர் 2014 (10:41 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
 
இதேபோல, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா சனிக்கிழமை உத்தரவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு, விடுமுறை நீதிபதியின் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்