சட்டசபை நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப நிதி பற்றாக்குறை என்ற காரணம் ஏற்புடையதல்ல: மு.க.ஸ்டாலின்

வியாழன், 2 ஜூலை 2015 (13:24 IST)
தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புக்கு நிதி பற்றாக்குறை என்ற காரணம் ஏற்புடையதல்ல என்று  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து விமானம் மூலம் இன்று காலையில் சென்னை வந்தார்.
 
இது குறித்து விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புக்கு நிதி பற்றாக்குறை என்ற காரணம் ஏற்புடையதல்ல.
 
மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மாற்றமுடியாது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் பேசி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்படும்.
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அதிமுக மாவட்ட செயலாளர் போல் செயல்பட்டார். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடந்து கொள்ளவில்லை.
 
அவரை மாற்றாவிட்டால் 2016 தேர்தல் முறையாக நடக்காது. எனவே அவரை மாற்ற வேண்டும் என்று நாங்களும் கூறுகிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்