பேரறிவாளன் மீது சிறையில் கொடூர தாக்குதல்: தலையில் 6 தையல்!

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (09:51 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் மீது சிறையில் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


 
 
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பேரறிவாளனுக்கு தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது. தலை மற்றும் கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வேலூர் சிறையில் பேரறிவாளனை வேறு அறைக்கு மாற்றும் போது சக கைதியான ராஜேஷ் என்பவர் பேரறிவாளன் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இவர் பேரறிவாளனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார்.
 
படுகாயமடைந்த பேரறிவாளனை வேலூர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். பேரறிவாளனின் வழக்கறிஞர், தியாகு, சீமான் உள்ளிட்ட பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறையில் உள்ள பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தனது மகன் தாக்கப்பட்டதை அறிந்த அவரது தாயார் அற்புதம்மாள் சிறைச்சாலைக்கு வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் ராஜேஷ் என்ற கைதி பேரறிவாளனை எதற்காக தாக்கினார் என்ற தகவல் வெளியாகவில்லை.
 
ஆனால், ராஜேஷ் என்ற கைதி சிறையில் மொபைல் உபயோகித்தார் எனவும், இதை பேரறிவாளன் சிறைக்காவலரிடம் கூறியதாக சந்தேகப்பட்டு பேரறிவாளன் மீது ராஜேஷ் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற தகவலும் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்