ஜெயலலிதா சிகிச்சை குறித்து பொய் அறிக்கை தான் வெளியிட்டோம்: உண்மையை ஒப்புக்கொண்ட பிரதாப் ரெட்டி!

சனி, 16 டிசம்பர் 2017 (14:51 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் முன்னதாக செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
 
அப்போது அவருக்கு சாதாரண காய்ச்சல் தான், அவர் விரைவில் வீடு திரும்புவார் என அப்பல்லோ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அதன் தலைவர் பிரதாப் ரெட்டி அந்த அறிக்கை பொய் எனவும், உண்மையை மறைத்து வெளியிடப்பட்ட அறிக்கை எனவும் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தான் என கூறினார்கள். மேலும் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவர் எப்போது வீட்டுக்கு செல்லலாம் என விரும்புகிறாரோ அப்போது அவர் செல்லலாம் என பேசி வந்தார் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி. ஆனால் ஜெயலலிதா கடைசி வரை வீடு திரும்பாமல் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.
 
இதனையடுத்து அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணை ஆணையத்திடம் இருந்து அப்பல்லோ மருத்துவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் வந்துள்ளதாகவும், தனக்கு வரவில்லை எனவும் கூறியுள்ளார் பிரதாப் ரெட்டி.
 
ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனைக்கு வந்ததாக கூறிய பிரதாப் ரெட்டி தற்போது விசாரணை நடந்து வருவதால் வேறு எதுவும் கூற இயலாது என கூறினார். மேலும் மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று அறிக்கை அளிக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என்பதாலேயே உண்மையை மறைத்து அறிக்கை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் பிரதாப் ரெட்டி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்