தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்: என்ன எழுதியிருக்கிறார்?

சனி, 14 ஜனவரி 2023 (14:50 IST)
தரக்குறைவாக பேசும் திமுகவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 
 
பொது மேடைகளில் திமுகவை சேர்ந்த பிரபலம் ஒருவர் அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சியினரை மோசமாக விமர்சனம் செய்யும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 
 
பொது மேடைகளில் பெண்களை அவதூறாக பேசுவது திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. நீண்ட காலமாக தமிழக மக்கள் இந்த மலிவான அரசியல் மேடை பேச்சை எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பாஜக பெண் தலைவர்களை கட்சிக் கூட்டத்தில் தரைக்குறைவாக பேசியதாக திமுக உறுப்பினர் சைத சாதிக் மீது முறைப்படி புகார் அளித்தோம். கடும் எதிர்ப்பு மற்றும் தொடர்ச்சியான அழுத்தத்துக்குப் பிறகே அவர் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்தது. ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது காவல் துறை
 
காவல்துறை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக இயங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக இயங்கி தங்கள் அடிப்படை பொறுப்புகளை மறந்து இன்று காவல்துறை செயலற்று போய் இருக்கிறது.
 
இழிவான மேடை பேச்சுகளுக்கு பெயர் பெற்ற திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை அவதூறாக பேசியதுடன் அவரது பேச்சில் மாண்புமிகு ஆளுநரை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதை காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
 
அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலரான ஆளுநரை தவறான வார்த்தைகளால் விமர்சித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நீண்ட காலமாக, திமுகவினர், பொது மேடைகளை, தரக்குறைவான பேச்சுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போல் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற அவதூறான பேச்சுகளை கண்டும் காணமல் இருக்கும் காவல்துறையின் செயலற்ற தன்மை அந்த அவதூறுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக இருக்கிறது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். 
 
இவ்வாறு அண்ணாமலை டிஜிபிக்குக் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
Edted by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்