யாரும் மதசாயம் பூசவில்லை; மாணவிக்கு நீதி வேண்டும்! – பாஜக அண்ணாமலை!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (13:17 IST)
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக மதசாயம் பூச முயலவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லாவண்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை விவகாரத்தில் மாணவியை விடுதியில் அதிக வேலை வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மதமாற்றம் செய்ய முயன்றதால் மாணவி இறந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ள நிலையில் பாஜகவினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி இறந்த சம்பவத்தில் மதசாயம் பூச வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “தஞ்சை பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் யாரும் மதச்சாயம் பூசவில்லை. மாணவி தற்கொலைக்கு உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனே ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்