வரும் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சியாக பாமக திகழும் - அன்புமணி ராமதாஸ்

திங்கள், 6 ஏப்ரல் 2015 (19:36 IST)
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று கட்சியாக பாமக திகழும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
உதகையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது,
 
"தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக, மற்றும் அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பா.ம.க விளங்கும். திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதிமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தேமுதிக செயல்படாத எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே பாமக மாற்று சக்தியாக விளங்கும்.
 
நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை வழங்க கோரி ராமதாஸ் தலைமையில் பாமக விரைவில் போராட்டம் நடத்த உள்ளது. வனப்பகுதியில் பொதுமக்களை தாக்கும் வன விலங்குகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது. அவற்றை உயிருடன் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
 
வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்போருக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத்தொகை 3 லட்சம் ரூபாயை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நீலகிரியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கு பதிலாக ஒருமுறை வரன்முறைப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டும்.
 
தாது மணல் கொள்ளை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். கிராணைட் முறைகேடு தொடர்பாக மதுரையில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த வேண்டும்"  என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்