ஓ.பி.எஸ்-ஐ சந்திக்க அமித்ஷாவும் மறுப்பு - டெல்லியில் நடப்பது என்ன?

செவ்வாய், 24 ஜூலை 2018 (16:11 IST)
டெல்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் சந்திக்க அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  
 
மேலும், செய்யாதுரையின்  எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்தாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
 
இந்த சூழ்நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் டெல்லி பயணம் முக்கியமானதாய் கருதப்பட்டது. ஏனெனில், இது அரசு முறை பயணமாக இல்லாமல், தனிப்பட்ட பயணமாகவே பார்க்கப்பட்டது. நேற்று மாலை டெல்லி சென்ற ஓ.பி.எஸ் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார் எனத் தெரிகிறது. ஆனால், மைத்ரேயனுக்கு மட்டுமே நிர்மலா அனுமதி அளித்துள்ளார். 

 
இதனையடுத்து, அமித்ஷாவை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டதாகவும், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
 
எடப்பாடி பழனிச்சாமியின் மீதுள்ள கோபத்தில்தான் சமீபத்திய ரெய்டுகள் நடத்தப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில்தான், ஓ.பி.எஸ்-க்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
இது ஒருபக்கம் எனில், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளை அடுத்து, எடப்பாடி தரப்பை போட்டுக்கொடுக்கவே ஓ.பி.எஸ் டெல்லி சென்றதாகவும் அதிமுக தரப்பில் தகவல் கசிந்துள்ளது. ஆனால், அவரை சந்திக்க ஏன் நிர்மலா சீதாராமனும், அமித்ஷாவும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்