திமுகவில் மீண்டும் அழகிரி சேர்த்துக்கொள்ளப்படுவாரா அல்லது திமுகவில் பிளவு ஏற்படுமா என்றுதான் தமிழகத்தில் திமுக அல்லாத மற்ற கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றன. ஏனெனில் கலைஞர் கருணாநிதி மரணமடைந்துள்ள இந்த சூழ்நிலையில் திமுக பலவீனமாக வேண்டும் என அதிமுக எதிர்பார்க்கிறது. இந்த குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என பாஜகவும் காத்திருக்கிறது.
திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகிவிட்டது. திமுகவின் செயற்குழு கூடவிருந்த சூழ்நிலையில், கருணாநிதி சமாதி அருகே ‘கட்சி தொடர்பான எனது ஆதங்கத்தை கூற வந்தேன். 2 அல்லது 3 நாட்களில் இதுபற்றி கூறுவேன்’ என பரபரப்பு பேட்டி கொடுத்தார் அழகிரி. ஆனால், செயற்குழு கூட்டத்தை தனது தலைமையிலேயே நடத்தி திமுகவின் அடுத்த தலைவர் நான்தான் எனக் காட்டி விட்டார் மு.க.ஸ்டாலின்.
மேலும், கடுமையான எதிர்ப்பு இருப்பதால், அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்கக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அழகிரி தனது பலத்தை ஸ்டாலின் மற்றும் திமுகவில் உள்ள தனது எதிர்ப்பாளர்களுக்கு காட்ட வேண்டும் என கருதுகிறார். திமுகவில் உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து கலைஞரின் நினைவிடம் நோக்கி தன்னுடைய தலைமையில் ஒரு பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்தும் பொறுப்பு அவரின் வலதுகரமான மதுரை இசக்கிமுத்துவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். சமீபத்தில் சென்னையிலிருந்து மதுரை சென்ற இசக்கிமுத்து அதற்கான வேலையை தொடங்கிவிட்டார்.
அதாவது, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலில் இருந்தும் அழகிரியின் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இசக்கிமுத்து இறங்கியுள்ளார். அநேகமாக, செப்டம் 5ம் தேதி அந்த பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அல்லது, முன்பே, அல்லது பின்பே சில மாற்றங்களும் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.