செப்.22 போயஸ் கார்டன் ; மாறுபடும் அப்பல்லோ-எய்ம்ஸ் அறிக்கைகள் : நடந்தது என்ன?

புதன், 8 மார்ச் 2017 (12:03 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து வெளியான அப்பல்லோ அறிக்கைகளும், எய்ம்ஸ் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதால் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது.


 

 
செப்.22ம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து செப்.23ம் தேதி அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட முதல் அறிக்கையில், ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமான அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டிருந்தது.
 
அதன் பின்பு அவர் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். ஆனால், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சில அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதவரவாளர்கள் ஜெ.வின் மரணம் குறித்து ஏராளமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இதையடுத்து, ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை வெளியிட்டது. அதில், செப்.22ம் தேதி இரவு, போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் சென்ற போது, அவர் மயங்கிய நிலையில் இருந்தார். மூச்சுத்திணறல் காரணமாக சிரமப்பட்டார். எனவே, செயற்கை சுவாசம் அளித்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஜெ. மோசமான உடல் நிலையில்தான் அப்பலோவில் அனுமதிக்கப்பட்டார் என இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநில தலைவர் ரவிசங்கர் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
 
செப்.22ம் தேதி ஜெயலலிதா, சாதாரன காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ நிர்வாகமும், மூச்சுத்திணறல் காரணமாக, மோசமான நிலையில் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என எய்ம்ஸ் நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டுள்ளதால், அவரது மரணத்தில் குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்